April 10, 2017 தண்டோரா குழு
ஒப்பந்தப்படி கூலி வழங்க வலியுறுத்தி 9 வது நாளாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நடைபெறும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டம் காரணமாக 200 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூலை பெற்று கூலி அடிப்படையில், அதனை துணியாக நெசவு செய்து கொடுத்து வருகின்றனர்.
கடந்த 2014 ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தப்படி கூலியை விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வலியுறுத்தியும், இதுவரை பிடித்தம் செய்த கூலிதொகையை வழங்க வலியுறுத்தியும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 2 ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 9 வது நாளாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, 1 லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் இயக்கப்படவில்லை. இதனால் நாள் ஒன்றுக்கு 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்திபாதிக்கப்பட்டுஇருப்பதுடன், 22 கோடி ரூபாய்உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த போராட்டம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 13 ம் தேதி கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.