May 26, 2017 தண்டோரா குழு
நாடாளுமன்றத்தில் சிறந்த செயல் திறன் கொண்ட 9 உறுப்பினர்களுக்கு இவ்வாண்டிற்கான ‘சன்சத் ரத்னா விருது’(sansad ratna) மே 27-ம் தேதி வழங்கப்படவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், நாடாளுமன்றத்தில் சிறந்த செயல் திறன் கொண்ட உறுப்பினர்களுக்கு ‘சன்சத் ரத்னா விருது’ வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டு விருதுக்கு தகுதி பெற்றவர்களுக்கு ஓய்வுப்பெற்ற நீதிபதி பி. சதாசிவம் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலுள்ள ஐஐடி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
உறுப்பினர்கள் எத்தனை விவாதங்களில் கலந்துக்கொண்டனர், எத்தனை கேள்வி எழுப்பினர், அவர்களுடைய வருகை கணக்கு, நாடாளுமன்ற மன்றங்களின் நிதிகளை எப்படி பயன்படுத்தினர் என்பதன் அடிப்படியில் இந்த விருது வழங்கப்படுகிறது. மேலும், மக்களவை மற்றும் பி.ஆர் .எஸ் இந்தியா ஆகியவற்றால் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், தேர்வு முறை வெளிப்படையாக செய்யப்படுகிறது.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தின் மவேல் பகுதி, சிவ சேனா எம் பி. ஸ்ரீரங் அப்பா பர்னே, மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிந்கோளியை சேர்ந்த காங்கிரஸ் எம்பி. ராஜீவ் ஷங்கர் ராவ், மகாராஷ்டிரா மாநிலத்தின் கோல்ஹாபூர் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி. தனஞ்சய் பீம்ராவ் மகாதிக் ஆகியோர் வெவேறு பிரிவுக்கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
விவாதங்களின் தரம் மற்றும் பிற நடவடிக்கைகளின் சிறப்பம்சம் ஆகியவற்றிற்கான விருது ஓடிஸாவின் கட்டாக் நகரின் பீஜூ ஜனதா தல எம்.பி. பார்துறுஹரி மகதப், மற்றும் கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்த ஆர்எஸ்பி எம்பி. பிரேமச்சந்திரன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் எம்.பி. பிரிவின் கீழ், மகாராஷ்டிரா மாநிலத்தின் நண்டுர்பார் பகுதி பா.ஜ.கவை சேர்ந்த டாக்டர் ஹீனா விஜயக்குமார் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அதே போல் பதவிக்காலத்தை சிறப்பாக முடித்த உறுப்பினர்கள் என்ற பிரிவில் சிவ சேனா எம்.பி சஞ்சய் ரௌத், கேரளா சிபிஐ(எம்) கே.என் பாலகோபால் மற்றும் டாக்டர் டி.என். சீமா ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.