October 13, 2016
தண்டோரா குழு
பொதுவாக 60 வயதை எட்டியவுடன் பணியில் இருந்து ஓய்வு எடுப்பதை தான் மக்கள் விரும்புவர்கள். ஆனால் 92 வயதிலும் குழாய் சரி செய்யும் வேலை செய்து அதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் கனடாவை சேர்ந்த முதியவர்.
கனடா நாட்டை சேர்ந்தவர் லோர்னே பிக்லே (92),குழாய் சரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த முதிர்ந்த வயதிலும் அவர் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.இரண்டாம் உலகப்போரின் போது கனடா தேசத்தின் படைகளுடன் இணைந்து ஹாலந்தின் விடுதலைக்காக போராடி, அப்போரின் முடிவின் போது வீடு திரும்பினார்.மேலும், 1947ம் ஆண்டு தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ப்ரோட்வே ஹீடிங் என்னும் நிறுவனத்தை துவங்கியுள்ளார் .சில நாட்களுக்கு பிறகு, அந்த நிறுவனத்தை அவருடைய நண்பர்களிடம் இருந்து வாங்கிக்கொண்டு அவரே அதன் உரிமையாளர் ஆனார். பிரச்னைகளை நல்ல முறையில் கையாளும் தன்மையும், வியாபாரதில் ஏற்படும் சிக்கலை தீர்க்கும் குணமும் தான் அவருடைய பணியை நல்ல முறையில் வளர உதவியாக இருந்துள்ளது.
1950ல் அவர் கற்றுக்கொண்ட வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆகியவற்றின் தொழில் நுட்பங்களை இந்நாள் வரை மாற்றாமல் அவைகளை கடைப்பிடித்து வருவது தான் தனது வெற்றியின் ரகசியம் என லோர்னே பிக்லே கூறியுள்ளார்.
மேலும், இத்தனை ஆண்டுகள் பிக்லே தனது பணியை கண்ணும் கருத்துமாக செய்து வந்ததால் உலகிலேயே அதிக வயதான பிளம்பர் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதனால் பெருமையும் மனநிறைவும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான தருணம் என்னை விட்டு எளிதில் விலகி விடாது. இந்த வயதிலும் என் உடல் கட்டழகுடனும், மூளை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருபதற்கு என் தொழில் தான் காரணம். ஆகையால் என்னுடைய மரணத்தருவாயில் கூட நான் பயன்படுத்தும் கருவி என் கையில் இருக்கும் என பிக்லே கூறியுள்ளார்.