August 17, 2016 தண்டோரா குழு
நமது இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தையொட்டி ஐ.நா. சபை அரங்கில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இந்தியாவின் 70-வது சுதந்திரதினத்தையொட்டி ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகம் சார்பில் நேற்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. பொதுச்சபை அரங்கில் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
ஏ.ஆர்.ரஹ்மான் மேடை ஏறியதுமே பார்வையாளர்கள் பகுதியில் இருந்த பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகள், இந்திய அமெரிக்கர்கள் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து தனது இசைக்குழுவுடன் சேர்ந்து ஏ.ஆ.ரஹ்மான் சுமார் 3 மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தினார். சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஜெய் ஹோ பாடலுக்கு அவர் இசைத்தார்.
இது தவிர சுபி பாடல்கள், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களுக்கும் அவர் இசைத்தார். ஏ.ஆர்.ரகுமானின் 2 சகோதரிகளும், பிரபல பாடகர் ஜாவித் அலியுடன் இணைந்து பாடினர்.டிரம்ஸ் சிவமணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டிரம்ஸ் வாசித்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இசை நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் பெரிதும் ரசித்தனர்.
இதேபோல், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஐ.நா. சபையால் அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் அங்குக் கர்நாடக இசைக்கச்சேரி நடத்தினார். இதன் மூலம் ஐநா சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
மேலும், தற்போது அவரைத் தொடர்ந்து ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதன் மூலம், எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு பிறகு, இந்தியாவின் சார்பில் ஐ.நா.வில் இன்னிசை கச்சேரி நடத்திய 2வது இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்தியாவின் சார்பில் ஐ.நா. சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இருவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.