August 3, 2018 தண்டோரா குழு
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து பொதுமக்கள் இன்று வழிபாடு செய்தனர்.
ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப் பெருக்கு தினமாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி மங்கள நாளான இன்று தம்பதிகள்,நீர் நிலைகளில் புனித நீராடி தாலி மாற்றிக் கொள்வது வழக்கம். அதேபோல திருமணமாகாத பெண்கள்,நல்ல கணவன் கிடைக்க வேண்டி கடவுளை வணங்குவர்.
இதன் ஒரு பகுதியாக கோவை பேரூர் பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றில் புனித நீராடிய இளம் தம்பதிகள் தங்களது தாலிக் கயிற்றை மாற்றி,இறைவனை வணங்கினர்.அதேபோல திருமணமாகாத இளம் பெண்கள்,நல்ல கணவர் கிடைக்க வேண்டி வணங்கி புனித நீராடினர்.மேலும் ஆயிரக்கனக்கானோர் கலந்துகொண்டு இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
அப்போது புரோகிதர்கள் பூஜை செய்து இறந்தவர்களுக்கு பிடித்த உணவுப்பண்டங்கள்,பலகாரங்கள், தாழம்பூ,பச்சை நாணல் மற்றும் வேஷ்டி,சேலை உள்ளிட்டவற்றை தானம் செய்து கொடுத்தும் வழிபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளில் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால்,லாரிகள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு அந்த தண்ணீரை கொண்டு வழிபாடு நடத்தப்பட்டது.ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் பொதுமக்கள் ஏராளமானோர் ஆற்றில் இறங்கி புனித நீராடினர்.இதனால் இந்த ஆடிப்பெருக்கு விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.