May 30, 2016
தண்டோரா குழு
பாகிஸ்தானிடம் உள்ள அணுசக்தி வலிமையால் இந்தியாவின் தலைநகரமான டெல்லியிலுள்ள இலக்கை 5 நிமிடங்களில் அடைந்து விடமுடியும் என்று அணுசக்தித் தொழில் நுட்ப வல்லுனர், தொழில் நுட்பத் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர்.
அப்துல் க்வாடர் கான் கூறியுள்ளார். அணு சக்தித் தொழில் நுட்பத்தைப் பெருக்குவதிலும், திட்டம் வகுப்பதிலும், செயல்படுத்துவதிலும், கைதேர்ந்தவர் 80 வயதான டாக்டர். அப்துல் க்வாடர் கான்.
டாக்டர்.கான் தலைமையில் 1998ம் ஆண்டு அணு ஆயுத சக்திப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதனுடைய 18ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் பொருட்டு நடைபட்ட கூட்டத்தில் பேசுகையில் கான் இவ்வாறு தெரிவித்தார்.
தன்னுடைய முயற்சியாலும், சக விஞ்ஞானிகளின் முயற்சியாலும், கடும் உழைப்பாலும் பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய வலிமை மிக்க அணுஆயுத சக்தி நாடாக உருவெடுத்துள்ளது. 1984ம் ஆண்டே அணு ஆயுதத்தின் சக்தியைப் பரிசோதிக்க முயற்சி செய்த போது, அன்றைய ஜனாதிபதி ஜென்ரல் சியா உல் ஹக் அதற்கு ஒப்புதல் தர மறுத்துவிட்டார்.
1978-1988 வரை ஜனாதிபதியாக இருந்தவர் ஜென்ரல் சியாஉல் ஹக். அணு ஆயுத பரிசோதனை செய்யத் தடை விதித்தார். பரிசோதனை செய்வதனால் உலக நாடுகளின் இராணுவத் தலையீடு ஏற்படும் என்று அஞ்சினார். ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். அத்தருணத்தில் உலக நாடுகள் தங்களுக்கு அளித்து வந்த உதவிகள் தடைப் பட்டுவிடுமோ என்ற பயமும் காரணம் என்று கூறியுள்ளார்.
காஹுடா ஆய்வு மையம் யுரேனியச் செறிவூட்டல் மிகுந்த ஆய்வு மையமாகும். இந்த மையத்தில் டாக்டர்.கான் போன்ற பலர் அணு ஆயுதம் பெருக்கும் திட்டத்திலும், செயல்படுத்தும் திட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
2004ம் ஆண்டு அணுஆயுத சக்தியை பெருக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு டாக்டர் கான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பிறகு 5 வருடங்களுக்குப் பிறகு உயர் நீதி மன்றத்தின் ஆணைப்படி நாட்டிற்குள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.
ஜெனரல். பர்வேஷ் முஷரஃப் காலகட்டத்தில் தன்னுடைய சேவை மிகவும் இழிவுப் படுத்தப்பட்டதாகவும், அணு சக்தி ஆராய்வு விஞ்ஞானிகள் மிகுந்த கேவலப் படுத்தப்பட்டதாகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தன்னுடைய உழைப்பு இல்லாவிட்டால் பாகிஸ்தான் முதல் முஸ்லீம் அணு ஆயுத சக்தி வன்மை மிக்க நாடாக உருவெடுத்திருக்க முடியாது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பல கடுமையான சோதனைகளுக்கிடையில் இந்தச் சாதனைகளை நிகழ்த்தியதாகவும், எனினும் எந்த அங்கீகாரமும் கிட்டவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.