August 18, 2016 தண்டோரா குழு
இந்திய ராணுவத்திற்கு எதிராகவும், காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாகவும் கோஷம் எழும்பியதாகக் கூறி ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் மீது தேச விரோத வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து, பெங்களூரு, டெல்லி, மும்பையில் உள்ள அதன் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கடந்த வாரம் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் காஷ்மீர் தொடர்பான கருத்தரங்கு ஒன்றை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்தியது.இதில் காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட் ஒருவரும் கலந்து கொண்டு அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில்,இந்திய ராணுவத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாகக் குற்றம் சாட்டிய ஏபிவிபியினர்,அந்த அமைப்பின் மீது தேச விரோத வழக்கைத் தொடர்ந்தனர்.மேலும் அந்த அமைப்பினரைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தைத் தற்காலிகமாக மூடுமாறு போலீசார் கேட்டு கொண்டதையடுத்து, பெங்களூரு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.மேலும், இதில் பணிபுரிவோருக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களும் மூடப்படுவதாக ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லி மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்கில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுடன் ஏபிவிபி கொடுத்த புகாரின் அடிப்படையில் பெங்களூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எனினும், இதில் சம்பந்தப்பட்டவர் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.