October 27, 2016 தண்டோரா குழு
வசீகரமான கண் மூலம் உலகையே ஈர்த்த ஆப்கானிஸ்தான் போலி ஆவணப் புகாரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
“நேஷனல் ஜியாகிரபிக்” இதழின் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மக்கரி 1985-ம் ஆண்டில் ஒரு படத்தை எடுத்துப் பிரசுரித்திருந்தார்.
அது பச்சைநிறக் கண்ணுடன் இருந்த ஒரு 12 வயது இளம் சிறுமியின் படம். அவர் படத்தை எடுத்தபோது, ஆப்கானிஸ்தான் தலிபானின் கைப்பிடியில் இருந்தது. பெஷாவரில் இருந்த நாசிர் பாக் என்னும் அகதிகள் முகாமில் தங்கியிருந்த அந்தப் பெண்ணின் பெயர் ஷர்பத் குலா. அவளது படத்தை நேஷனஸ் ஜியாகிரபிக் இதழின் அட்டையில் பிரசுரித்திருந்தார்.
ஆப்கானிஸ்தான் போரின் ‘மோனலிசா’ என்ற பெயரில் வெளியான அந்த புகைப்படம் உலக அளவில் புகழ் பெற்றது.
இருபது ஆண்டுகள் கழித்து 2002 ஆம் ஆண்டில் தலிபானின் ஆட்சி முடிவுக்கு வந்த பின், அதே பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் படம் எடுத்து, பிரசுரித்தார்.
தற்போது 40 வயதான ஷர்பத் குலா சட்ட விரோதமாக பாகிஸ்தான் அடையாள அட்டையை போலியாக வைத்திருந்தாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஆப்கானிஸ்தானுக்கான அடையாள அட்டையும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷரபத் பிபி என்ற பெயரில் பாகிஸ்தான் அடையாள அட்டையை அவர் கடந்த ஆண்டு விண்ணப்பித்தாக பாகிஸ்தான் அதிகாரிகள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அடையாள அட்டை பெறுவதற்காக ஏமாற்று வேலைகளில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளில் ஷர்பத் குலாவும் ஒருவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.