July 22, 2016 வெங்கி சதீஷ்
சென்னையில் இருந்து அந்தமானுக்குச் சென்ற விமானப்படை விமானம் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் பயணம் செய்த 29 ராணுவ வீரர்கள் கதி என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து அந்தமான் தீவில் உள்ள போர்ட்பிளேயர் என்ற இடத்திற்கு ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு 29 வீரர்களுடன் ஏ.என்.32 ரக விமானம் காலை புறப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் தொடர்பில் இருந்த விமானம் பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தாம்பரம் விமானப்படை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு காணாமல் போன விமானத்தைத் தேடி வருகின்றனர்.
இந்தப் படியில் இரண்டு டார்னியர் விமானங்களும் 2 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு கப்பல்கள் ஆந்திராவில் இருந்து வரவளைக்கப்பட்டு சுமார் 120 நாட்டிகல் மைல் தொலைவில் தேட இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன விமானம் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட பெரிய விமானம் எனவும், இதில் ஆயுதங்கள் உள்ளிட்ட பல ராணுவத் தளவாடங்கள் இருந்தது எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே போல கடந்த 18 மாதங்களுக்கு முன் ஆபரேசன் ஆம்லா ஒத்திகையின் பொது ஒரு விமானம் காணாமல் போனது. பின்னர் சுமார் ஒரு மாதம் தேடிய பிறகு அதன் பாகங்கள் கடலுக்கடியில் கிடைத்தது. மேலும் அதில் பயணம் செய்த வீரர்களின் எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தைத் தேடும் பணி,
மாயமான விமானத்தைத் தேடும் பணியில் 4 கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கர்முக், கரியால், ஜோதி, குதார் ஆகிய கடற்படை கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் 2 டார்னியர் விமானங்களும் விமானத்தைத் தேடி வருகின்றது.
முன்னாள் ராணுவ அதிகாரி கருத்து
வங்க கடலில் ராணுவ விமானம் மாயமானது இதுவே முதல் முறை என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சுந்நதரம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் அந்தமான் செல்ல 2 மணி 10 நிமிடம் ஆகும்.
முழு சோதனைக்கு பிறகே விமானம் புறப்படும் எனவும் ராணுவ அதிகாரி சுந்தரம் தெரிவித்துள்ளார். இயந்திர கோளாறால் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தமான் இடையிலான வான் வெளியில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. தாழ்வு மண்டலத்தைக் கடந்து சென்றபோது ராணுவ விமானம் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.