August 2, 2016 தண்டோரா குழு
அமெரிக்க நாட்டின் பிரபல ஸ்கை டைவிங் வீரரான லுக் ஐகின்ஸ், 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாரச்சூட் இல்லாமல் பாலைவனப் பகுதியில் குதித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவிங் வீரரான லூக் ஐகின்ஸ்(42). இதுவரை பாரச்சூட் மூலம் வானில் இருந்து கீழே குதித்து சுமார் 18 ஆயிரம் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். இதில் எல்லாம் திருப்தியடையாத அவர் வேறு ஏதாவது வகையில் மிகப்பெரிய உலக சாதனையை படைக்க வேண்டும் என்று விரும்பினார்.
மேலும், பலமுறை பாரச்சூட்டை பயன்படுத்தி குதித்துப் பழகியதால் இம்முறை பாரச்சூட் இல்லாமல் வானில் இருந்து கீழே குதிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தார். இதற்காக அவர் சுமார் ஒன்றரை ஆண்டு காலமாக தீவிர பயிற்சி மேற்கொண்டர்.
விமானத்தில் பறந்து சென்ற லூக், சுமார் 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கலிபோர்னியாவில் உள்ள பாலைவனப்பகுதியை நோக்கி பாரச்சூட் ஏதுமின்றி கீழே குதித்தார். மணிக்கு சுமார் 150 மைல் வேகத்தில் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருந்த அவர், சுமார் 18 ஆயிரம் அடி தூரத்துக்கு வந்த பின்னர் தான் அணிந்திருந்த ஆக்சிஜன் முகமூடியையும் கழற்றி விட்டார்.
அவர் வந்து விழ ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் சுமார் 100 அடி பரப்பளவு கொண்ட வலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் லூக்கின் குடும்பத்தாரும், அவரது நண்பர்களும், ரசிகர்களும் துடிதுடிக்கும் இதயங்களுடன் அவருக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
அவர் திட்டமிட்டபடி பாலைவனத்தில் விரிக்கப்பட்டிருந்த அந்த வலைக்குள் பத்திரமாக வந்து விழுந்த லூக் ஐகின்ஸ், சில வினாடிகளுக்குப் பின்னர் உடலில் ஒட்டியிருந்த தூசை தட்டிவிட்டபடி படபடப்புடன் அங்கு நின்றிருந்த மனைவி மோனிக்காவை நோக்கி ஓடோடி சென்று கட்டியணைத்து முத்தமழை பொழிந்தார்.
மேலும், நாம் செய்ய நினைக்கும் காரியங்களை சரியாக வழியில் திட்டமிட்டு, அதை நல்ல முறையில் செயல்படுத்தும் போது, நம்மால் முடியாது என்று தோன்றுவதையும் கூட வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என்பதைக் காட்டவே தான் இந்த முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.