August 11, 2016 தண்டோரா குழு
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அர்மீனிய பளுதூக்கும் வீரருக்குப் போட்டியின் போது இடது கை முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 77 கிலோ எடை பிரிவினருக்கான பளுதூக்கும் தகுதி போட்டி நடைபெற்று வந்தது. இதில் பங்கேற்ற அர்மீனியா நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரானிக் கராபெட்யன் 195 கிலோ எடையைத் தூக்க முயன்ற போது அவரின் இடது முழங்கை முறிந்தது.
இதையடுத்து வலியில் துடித்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.இந்தாண்டு நடைபெற்றுவரும் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் வீரர் சமீர் அயிட், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற போது அவரது இடது கால் முறிந்தது.
பெண்களுக்கான சைக்கிள் போட்டியில் பங்கேற்ற நெதர்லாந்தைச் சேர்ந்த வீராங்கனை அன்னெமிக் வான் விலுடின் விபத்தில் சிக்கி காயமடைந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.