July 13, 2016 தண்டோரா குழு
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்துள்ளது. இதனால் இந்திய அளவில் குறிப்பிட்ட பல பகுதிகளில் வனப்பரப்பு அதிகரித்துள்ளதோடு, அங்கு இருக்கும் வன விலங்குகள் மற்றும் பறவைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அவை அடிக்கடி மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவது சகஜமான நிகழ்வாக உள்ளது. அதுமட்டுமின்றி பல குடியிருப்புகள் வனப்பகுதியிலேயே இருப்பதால் மனிதன் மற்றும் வன விலங்குகளின் மோதல்கள் தவிர்க்கமுடியாததாக மாறியுள்ளன. குறிப்பாக யானை, புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளன.
இதில் யானை வனப்பகுதியை அதிகரிக்கச் செய்வதில் மிகவும் உறுதுணையாக இருப்பது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல எந்த ஒரு இடத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அதிகமாக வாழ்கிறதோ அந்த இடம் மிகவும் நல்ல வனப்பகுதியை உடைய இடம் எனக் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் எங்கு மான், குரங்கு உள்ளிட்ட பல்வேறு சிறு வனவிலங்குகள் அதிகம் இருக்குமோ அங்குதான் புலி மற்றும் சிறுத்தைகள் இருக்கும்.
இந்த மூன்று விலங்குகளும் கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. மேலும் கிருஷ்ணகிரி ஓசூர் பகுதிகளில் யானைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இவ்வாறு வந்தபோதுதான் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதி ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இது தற்போது மேலும் தொடர்கதையாக நடைபெறுமோ என எண்ணத்தோன்றும் அளவிற்குப் பல சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக இன்று காலை கிருஷ்ணகிரியை அடுத்த சூளகிரி அருகேயுள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து நாய்கள் விரட்டியதால் தாவி வந்த ஒரு புள்ளிமான் லாவகமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களைத் தாண்டி சென்றுள்ளது. அதை அந்தவழியாகச் சென்ற ஒருவர் தன்னுடைய செல் போனால் படம் பிடித்துள்ளார். அந்தப் படம் தான் மேலே குறிப்பிட்ட செய்திக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.
சாதாரணமாக வனப்பகுதியை விட்டு இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரும் மான் போன்ற விலங்குகள் தற்போது பகல் நேரத்திலேயே வருவது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல் இன்று காலை திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இலங்கைத் தமிழர்கள் ரூபன்(27) மற்றும் மயூரன் ஆகியோர் மீது திடீரென பறந்துவந்த மயில் மோதியதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. அதில் ரூபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயூரன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இருவரும் மதுரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சமீபகாலமாக விலங்குகளால் மனிதர்கள் உயிரிழப்பதும், மனிதர்களால் விலங்குகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது என்பது மட்டும் உண்மை.