November 24, 2017 தண்டோரா குழு
தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் வழங்கப்படும் பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வி திட்டம், சத்துணவுத் திட்டம்,முதலிய திட்டங்கள் மூலமாகத் தமிழ்ச் சமூதாயம், கல்வி எனும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்குத் தொண்டாற்றி வரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும்.
தமிழ்ச் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபட்டு வருபவருக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படும்.
தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களுக்கும், சமூதாய முன்னேற்றதிற்க்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களில் சிறந்த ஒருவருக்கு சிங்காரவேலர் விருது வழங்கப்படும்.
மேலும்,விருது பெறுபவருக்கு விருதுதொகையாக ஒரு லட்சம் ருபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.
இவ்விருதுக்கு தகுதியானவர்கள் அந்தந்த மாவட்டத்திலுள்ள ஆட்சியரகத்தில் தமிழ்வளர்ச்சித் துறைக்கு நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்று 2017 நவ 30ஆம் தேதிக்குள் தமிழ்வளர்ச்சி இயக்குநருக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.