July 8, 2016 தண்டோரா குழு
குஜராத்தில் உள்ள டீசாவைச் சேர்ந்த நாற்பது வயதான சஞ்சய் டர்ஜியின் மகள் ஷ்ரெயா டர்ஜி. 12 வயதான இச்சிறுமியின் காதிலிருந்து எறும்புகள் சாரை சாரையாக வெளிவந்த வண்ணம் இருந்தன.
கடந்த ஆகஸ்டு மாதம் சிறுமி காது குடைச்சலால் அவதிப் பட்டுள்ளார். பாரம்பரிய கை வைத்தியம் பலனளிக்காத காரணத்தினால், சூனியமாக இருக்குமோ என்று அதற்கும் மாற்று செய்துள்ளனர்.
தாங்க முடியாத நிலையில் அவரது தந்தை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். எக்ஸ் ரே, மற்றும் பிற பரிசோதனைகளுக்குப் பிறகு சிறுமியின் காதின் செவிப்பறைக்கு அருகில் ஏராளமான எறும்புகள் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எறும்புகள் எவ்வாறு, எங்கே உற்பத்தியாகின்றன என்பது புரியாத புதிராகவே இருந்தது.
எறும்புகள் மூச்சு முட்டி இறக்கும் வண்ணம் சொட்டு மருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டன. ஆயினும் புதிய வரவுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று டாக்டர் ஜவஹர் தெரிவித்தார்.
அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழ்நிலையும் சுகாதாரமுள்ளதாகவே உள்ளது, அதனால் அவையும் காரணமாக இருக்கமுடியாது. காதினுள் எறும்புகள் முட்டையிட வாய்ப்பில்லை ஏனெனில் ராணி எறும்பு அவ்விடம் காணப்படவில்லை என்றும் கூறினார்.
புகைப் படக் கருவியை உள் செலுத்தி எறும்புகளின் இனப் பெருக்கத்திற்குக் காரணத்தைக் கண்டு பிடிக்க முயன்றுள்ளனர். ஆயிரக்கணக்கான எறும்புகள் ஊர்வலம் வர என்ன காரணம் என்பதைக் கண்டறிய பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.
மருத்துவர்களின் தொடர் முயற்சியினால் சிறிது சிறிதாக அவ்வெறும்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. சிலமுறை ஒரே நாளில் 100 எறும்புகள் வரை கூட அகற்றப்பட்டுள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 6 மாத சிகிச்சையில் காதிலுள்ள எறும்புகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டன.
இவரது தந்தை தொலைக் காட்சி பெட்டிகளைப் பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்துபவர். தனது மகளின் இப்பிரச்சனை முற்றிலுமாக குணமடைவதற்கு கடவுளின் கருணையே காரணம் என்று உணர்வு பொங்கக் கூறியுள்ளார்.
காதினுள் எறும்புகளின் சஞ்சாரம் மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்ததாகவும், பலமுறை தான் பள்ளியில் இருக்கும் போது, அல்லது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, எறும்புகள் காதை விட்டு வெளியே ஊர்ந்து வரும் என்றும், அதைக் கண்டு மற்றவர்கள் பயந்து தன்னை ஒதுக்கியதும் உண்டு என்றும் ஷ்ரெயா கூறியுள்ளார்.
ஆனால் தற்பொழுது அத்துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், விடுமுறைக்கு மாமாவின் வீட்டிற்குச் செல்லப் போவதாகவும் சிறுமி ஷ்ரெயா தெரிவித்துள்ளார்.