November 4, 2016 தண்டோரா குழு
நீதிபதிகள் தொலைபேசி ஒட்டுக் கேட்பது குறித்து தில்லி காவல் துறையினர் கேள்வி கேட்டதற்கு, “உளவுத் துறையிடம் (ஐ.பி.) போய்க் கேளுங்கள்” என்று தில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தில்லி உயர் நீதிமன்ற பொன்விழா ஆண்டு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், நீதிபதிகள் போன் ஒட்டு கேட்கப்படுவதாகப் புகார் கூறினார். மத்திய அரசு இதனை உடனடியாக மறுத்தது.
இந்நிலையில் தில்லி காவல்துறையினர், கெஜ்ரிவாலுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினர். அதில், “நீதிபதிகள் போன் ஒட்டு கேட்கப்படுவதாக சமீபத்தில் புகார் கூறியிருந்தீர்கள். சில நீதிபதிகள் தங்களது போன் ஒட்டு கேட்பதாக நீங்கள் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உரிய காரணமில்லாமல் போன் ஒட்டுக்கேட்பது தவறு. இதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எந்த சம்பவத்தின் அடிப்படையில், நீதிபதிகள் போன் ஒட்டுக்கேட்கப்படுகிறது என நீங்கள் கூறியுள்ளீர்கள்? எந்த தகவல் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளீர்கள்?” என்று விளக்கம் கேட்டுள்ளனர்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் முதல்வர் கெஜ்ரிவால், “டுவிட்டரில்” “உளவுத் துறையான ஐ.பி.யிடம் கேட்க வேண்டும். உங்களுக்குத் தேவையான தகவல்களை அவர்கள் தருவார்கள்” எனக் கூறியுள்ளார்.