June 1, 2016 தண்டோரா குழு
16 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் உலக சாதனை படைத்த பிரணவ் தனவாடேவிற்கு இடம் வழங்காமல் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூனடெண்டுல்கருக்கு இடம் கொடுக்கப்பட்டதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான சிறுவர்களும், இளைஞர்களும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற கனவுடன் தெருத் தெருவாக விளையாடி வருகின்றனர்.
ஆனால் கடைசியில் வாய்ப்பு கிடைப்பது என்னவோ சிலருக்கு மட்டுமே. இந்த நிலையில் சமீபத்தில் மேற்கு மண்டலத்திற்கான 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் சச்சினின் மகன் அர்ஜுன் பெயர் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து அந்தத் தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ள சிலர், சில மாதங்களுக்கு முன்பு உள்ளூர் கிரிக்கெட்டில் 16 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாடி ஆட்டமிழக்காமல் 1009 ரன்கள் எடுத்து உலகசாதனை படைத்த மும்பை கல்யாண் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரின் மகன் பிரணவ் தேர்வு செய்யப்படாதது குறித்து விமர்சனம் செய்திருந்தனர்.
மேலும் கிரிக்கெட்டின் எந்த வகை ஆட்டத்திலும் யாரும் இந்த அளவுக்கு ரன் குவிக்கவில்லை ஆனால், அவருக்கு 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. மாறாக எந்தவித சாதனையும் புரியாமல் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது என்றும் விமர்ச்சனம் செய்துள்ளனர்.
அதே சமயம் மற்ற சிலர் அர்ஜுனுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கூறும்போது, பிரணவ் தனக்கு எதிராக விளையாடிய 10 வயது மாணவர்களுக்கு எதிராக ரன் குவித்தார். ஆனால் அர்ஜுன் சச்சின் தனக்கு இணையான பலம் பொருந்திய அணிக்கு எதிராக
இரண்டு முறை சதம் அடித்துள்ளார். மேலும் கடந்த போட்டியில் பந்து வீசி 6 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் ஒன்றும் சச்சின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த நான்கு ஆண்டுகளாக அவரது ஆட்டத்தைக் கணித்த பின்னரே சேர்க்கப்பட்டுள்ளார் எனவும்
ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனாலும் இரு தரப்பிலும் ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துக்கள் தெரிவிப்பதே தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக உள்ளது.