July 23, 2016 வெங்கி சதீஷ்
நெல்லை, நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபட்ட 87 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2013–ம் ஆண்டில் 4 ஆதாயக் கொலைகள், 2 மத ரீதியான கொலைகள், 4 சாதி ரீதியான கொலைகள் உள்ளிட்ட 105 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2014–ம் ஆண்டில் 3 ஆதாயக்கொலைகள், 12 சாதி ரீதியான கொலைகள் உள்ளிட்ட 108 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2015–ம் ஆண்டில் 4 ஆதாயக் கொலைகள் உள்ளிட்ட 102 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016–ம் ஆண்டில் 2 ஆதாயக் கொலைகள் உள்ளிட்ட 105 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு வழக்கு தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த வருடம் சாதி மற்றும் மத ரீதியான கொலை வழக்குகள் எதுவும் இல்லை. காதல், கள்ளக்காதல் தொடர்பாக 11 கொலை வழக்குகளும், குடும்ப தகராறு காரணமாக 15 வழக்குகளும், முன்விரோதம் காரணமாக 12 வழக்குகளும், இடப்பிரச்சினை தொடர்பாக 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
கடந்த 2015–ம் ஆண்டு நடந்த 23 கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோர்ட்டு மூலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வருடம் 6 மாதத்திற்குள் 12 கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனையும், ஒரு வழக்கில் 5 வருடம் சிறை தண்டனையும், ஒரு வழக்கில் 3 வருடம் சிறை தண்டனையும் கோர்ட்டு மூலம் வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மற்றும் ரவுடிகள் 87 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.