December 21, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் சுமார் 25 ஆண்டுகள், உறைநிலையில் இருந்த கரு மூலம் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த டினா கிப்சன் மற்றும் பெஞ்சமீன் கிப்சன் தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன.குழந்தை இல்லாத அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தை பிறப்பின் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த குழந்தை சுமார் 25 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் பிறந்தது தான்.
டீனாவின் கணவர் பெஞ்சமின் “Cystic fibrosis” என்னும் நோயால் பாதிக்கபட்டிருந்தார். இந்த நோயின் பாதிப்பால் பெஞ்சமின் தம்பதினருக்கு குழந்தைகள் இல்லை. அதனால், அவர்கள் அநாதை குழந்தைகளை வளர்த்து வந்தனர். இருப்பினும், தங்களுக்கு என்று சொந்த குழந்தை ஒன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இந்நிலையில்,அந்த தம்பதியினர் மருத்துவர்களின் உதவியை நாடினர். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, சுமார் 25 ஆண்டுகள் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவை IVF சிகிச்சை முறை மூலம், டீனாவின் கருப்பையில் வைத்தனர். அதன்பிறகு, கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு எம்மா என்று பெயர் வைத்துள்ளனர்.
இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு நியூயார்க்கில் 20 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.