November 26, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் சனி, ஞாயிறு ஆகிய கிழமைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏ.டி.எம். மையங்கள் முடங்கும் சூழல்நிலை உருவாகியுள்ளது.
நவம்பர் 8ம் தேதி உயர் மதிப்பிலான ரூபாய் 500, 1000 செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் பணத்தட்டுப்பாட்டைப் போக்க அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி இயங்கி வந்தன.
அப்படி இருந்தும் பொதுமக்களுக்குப் பணம் வழங்க முடியாமல் வங்கிகள் தவித்து வருகின்றன. பல ஏ.டி.எம். மையங்கள் முடங்கியுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வங்கிக் கிளைகளுக்கும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வார நாட்களில் வேலைக்குச் செல்வோர் விடுமுறை நாளில் பணம் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் நம்மிடத்தில் கூறியதாவது;
வங்கிகளுக்கு மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் சனிக்கிழமை, மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கும். எனவே, நான்காவது சனிக்கிழமையான நவம்பர் 26 வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து நாள் ஞாயிற்றுக்கிழமை பொதுவான விடுமுறையாகும்.
எனவே, வங்கியின் செயல்பாடுகளைப் பயன்படுத்துவோர் திங்கள்கிழமை வரையில் காத்திருக்க வேண்டும்.
வங்கிக் கிளைகள், ரிசர்வ் வங்கி அலுவலகம் ஆகியவை இரண்டு நாட்கள் செயல்படாது என்பதால், பணம் எடுப்பதற்காக ஏடிஎம். மையங்களில் ஏராளமானோர் ஏடிஎம் மையங்களில் கூடுவர். இதன் காரணமாக ஏ.டி.எம் மையங்கள் முடங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.