December 12, 2017 தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய பீட்டா அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளது.
காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதையடுத்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது.
2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் முழுமையாக தடை விதித்தது.இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, இந்திய மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழக அரசு சார்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிராக பீட்டா, விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கான்வில்கர், சந்திரசூட் அமர்வு, அப்போது ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தது.
மேலும், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சட்டத்தை மீறும் வகையில் மாநில அரசு சட்டம் இயற்ற அதிகாரம் உண்டா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்,ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான வழக்கிலும் தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.