August 1, 2016 தண்டோரா குழு
பீகாரில் முதல்வராக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிதிஷ்குமார் அரசு அங்கு மாநிலம் முழுவதும் மதுவிலக்கை அறிவித்தது.
இதனால் மாநிலத்தில் பலவேறு பகுதிகளிலும் குற்றங்கள் குறைந்துள்ளது எனவும், நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பல நல்ல முறையில் வாழ்ந்து வருகிறது எனவும் விளம்பரம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பல செல்வந்தர்களும், எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் வெளிநாட்டு மதுக்களை வாங்கி வீட்டிலேயே வைத்துக் குடித்துவிட்டு கும்மாளம் போடும் படங்கள் வெளியானதைத் தொடர்ந்து அதற்கும் தடை விதிக்கும் வகையில் வீட்டில் மது வைத்திருந்தால் அந்த வீட்டில் உள்ள 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவரையும் கைது செய்யச் சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்தது. குறிப்பாக அனைவரும் கைது செய்யப்பட்ட பின் குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்வி பிரதானமாக இருந்தது.
மேலும் இந்தச் சட்டம் மூலம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க முடியுமே ஒழிய மக்கள் நலன் இதில் இல்லை எனப் பா.ஜ.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கள் விற்பனைக்கு மட்டும் விலக்கு அறிவித்து நிதிஷ் அரசு அறிவித்துள்ளது. இது அவர் அடித்த அந்தர்பல்டி என அரசியல் விமர்சகர்கள் விமர்ச்சனம் செய்கின்றனர்.