December 4, 2017 தண்டோரா குழு
பீகார் மாநில துணை முதலமைச்சர் சுஷில் மோடி மகனின் எளிமையான திருமணம் பலருடைய பாராட்டைப் பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர் சுஷில் மோடியின் மகன் உட்கர்ஷ் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த யாமினிக்கும் நேற்று(டிசம்பர் 3) மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்கு அழைப்பிதல்கள் அச்சிடப்படவில்லை.மேலும், வாட்ஸ்அப் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்கள் மூலம் திருமணத்திற்கு அழைப்பு தரப்பட்டது.திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்புகள் எதையும் கொண்டு வர வேண்டாம் என்ற கோரிக்கையும் விடப்பட்டது.விருந்தாளிகளுக்கு மதிய உணவு விருந்தோ மற்றும் இரவு உணவு விருந்தோ வழங்கப்படவில்லை.
மேலும்,திருமணங்களின்போது, வரதட்சணை வாங்குவதற்கு எதிராக பேனர்களும், துண்டு பிரச்சாரங்களும், உடல் உறுப்புகளை தானம் செய்வதன் சிறப்புகள் மற்றும் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரச்சாரங்களும் வழங்கப்பட்டது.
இத்திருமணத்திற்கு பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ் குமார், முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்,மத்திய மந்திரிகளான அருண் ஜெட்லி, ஆனந்த் குமார், ராதா மோகன்சிங்,ராம் விலாஸ் பாஸ்வான், பீகார் ஆளுநர் சத்ய பல் மாலிக் மற்றும் மேற்கு வங்கத்தின் ஆளுநர் கேஸ்ரிநாத் திரிபதி ஆகியோர் கலந்துக்கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.