June 13, 2016
தண்டோரா குழு
தென் அமெரிக்காவில் உள்ளது உருஹுவே நாடு. இந்நாட்டைச் சேர்ந்த ஜுஅன் பப்லொ குலாசோ பிறவியிலே கண்பார்வை இழந்தவர். ஆயினும் கடவுள் அளித்த பிரத்தியேக அறிவின் திறனாலும், கேட்கும் திறனாலும் கிட்டத்தட்ட 3,000 பறவைகளின் ஒலியைப் பிரித்தறிய இயலும். 720 இனங்களைத் தரம் பிரிக்க முடியும்.
தற்போது 29 வயதான குலாசோ சிறு வயதிலேயே ஒலியின் பூரண சுருதியைக் கணக்கிடும் வல்லமை பெற்றவர். அவரது தந்தை தண்ணீரில் கல்லை விட்டு எறிவார்.
அதனால் உண்டாகும் ஒலியின் மூலம் கல்லின் பரிணாமத்தை விவரிப்பதில் தேர்ந்தவர். இவரது ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக இவரது தந்தை கலைக் களஞ்சியத்திலிருந்து பல ஆயிரக்கணக்கான பறவைகளின் பெயர்களை இவருக்குக் கற்பித்தார்.
அதுமட்டுமின்றி ஒலி நாடாவில் அவற்றின் சப்தத்தைப் பதிவு செய்து அந்தந்தப் பறவையை இனம் காண கற்றுக்கொடுத்தார். மிதமிஞ்சிய நினைவாற்றலாலும், புத்திக்கூர்மையாலும் குலாசோ 3,000 பறவைகளைச் சப்தத்தால் இனங்காணும் வல்லவரானார். இத்தகைய சக்தி 10,000 பேரில் ஒருவருக்கே
வாய்க்கும்.
கண்சக்தி இல்லாத இவருக்கு மூளையின் சக்தியும், கேட்கும் திறனும் அதிகம். கடந்த 2003ம் ஆண்டு ஒருமுறை பறவை பற்றி ஆய்வு செய்யும் குழுவுடன் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது நண்பர் அளித்த ஒலிப் பதிவு செய்யும் கருவியை உபயோகித்து பறவைகளின் சரித்திரத்தையே கற்றுத்தேர்ந்தார். ஆற்றின் கரையோரம் செல்லும் பொழுது பறவைகளின் ஒலியைத் தூரத்திலிருந்து கேட்டவுடனே பெயரை சொல்வதில் வல்லவர்.
மிகவும் வனப்பிரதேசமான குளிர் அதிகமான அண்டார்டிகா பகுதிற்குச் சென்றபொழுது கடல் சிங்கங்கள், கடல் நாய்கள், உருகும் பனிப்பாறை ஆகியவற்றின் சப்தங்களைத் துல்லியமாகப் பதிவு செய்து மனதில் பதித்துக் கொண்டுள்ளார். ஆக உலகத்தையே இவர் ஒலியின் வடிவில் உணர்ந்தார். ஒளியையும் இவரால் உணரமுடிந்தது. இரவு, பகல் பிரிப்பது இவருக்குக் கடினமாக இருந்ததில்லை.
பறவைகளைப்பற்றிக் கரைத்துக் குடித்த இவருக்குப் பறவைகளின் உருவம் பற்றியோ, நிறம் பற்றியோ பார்த்து அறியமுடியாத நிலை. விலங்குகளின் மொழியைப் பற்றியும், இயற்கை மாற்றங்களைப் பற்றியும், சப்தங்களை வைத்தே கணிப்பதில் தேர்ந்தவர்.
சுமார் 250 பறவைக் கூட்டத்தில் இருந்து 15 பறவைகளைத் தேர்ந்தெடுத்து ஒலி எழுப்பச் செய்வர். அதை சரியாகக் கண்டறிவோருக்கு பரிசு என அறிவித்தனர். அதன்படி 2014ம் ஆண்டு இவரது திறமையை அங்கீகரித்து நாட் ஜியோ டி.வி இவருக்கு 45,000 டாலர்கள் பரிசளித்தது. அதையும் நவீன ஆடியோ கருவி வாங்கச் செலவு செய்துள்ளார்.
கேட்கும் திறன் அனைவருக்கும் பொதுவே, ஆனால் சின்ன ஒலி அதிர்வையும், நுணுக்கங்களையும் பகுத்தறியும் அறிவு கூர்மையே குலாசோவின் வெற்றிக்குக் காரணம் என்று உருஹுவே பல்கலைக் கழகத்தின் ஒலியியல்துறைத் தலைவர் அலிசியோ முயனொ பாராட்டியுள்ளார்.