October 14, 2016 தண்டோரா குழு
தமிழக பாஜக-வின் மூத்த தலைவர் இல.கணேசன் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை தலைவர் அறையில் நடைபெற்ற விழாவில் இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார்.
மத்தியப்பிரதேசத்தில் பா.ஜனதா சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, மேல்சபை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு கடந்த 17-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அந்த பதவிக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனை கட்சி தலைமை தேர்வு செய்தது.இதையடுத்து,மேல்சபை உறுப்பினர் பதவிக்கு இல.கணேசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், காலியாக உள்ள பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் இல.கணேசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராக அவர் இன்று பதவியேற்று கொண்டார். மாநிலங்களவை சபாநாயகரும், துணை ஜனாதிபதியுமான ஹமித் அன்சாரி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது.