August 19, 2016 தண்டோரா குழு
கர்நாடக மாநிலத்தில் மாடுகளை வேனில் ஏற்றி, விற்கச் சென்ற பாஜக நிர்வாகியை இந்துத்துவா அமைப்பினர் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றனர்.இது தொடர்பாக போலீஸார் 18 பேரைக் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கேஜிகெ கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் பூஜாரி(29).வாடகை வேன் ஓட்டுநரான இவர் கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் பகுதி செயலாளராக இருக்கிறார்.கடந்த புதன்கிழமை இரவு சுமார் 8.30 மணியளவில் இவர் அதே பகுதியை சேர்ந்த அக்ஷய் தேவடிகா(22) என்பவருடன் சேர்ந்து 3 மாடுகளை ஹெப்ரி சந்தைக்குக் கொண்டு செல்வதற்காக வேனில் ஏற்றியுள்ளார்.
அப்போது இந்து ஜாகர்ன வேதிகே அமைப்பைச் சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்டோர் அங்கு வந்துள்ளனர்.அவர்கள் பிரவீன் பூஜாரி, அக்ஷய் தேவடிகா ஆகியோரை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கினர்.மாடுகளை ஏற்றப் பயன்படுத்திய வேனும் நொறுக்கப்பட்டது.
பிரவின் பாஜகவில் உள்ளதால் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களை செய்ய தன்னுடைய பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என்று இந்துவா கட்சியினர் குற்றம் சாற்றியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.படுகாயமடைந்த பிரவீன் பூஜாரி மற்றும் அக்ஷய் தேவடிகாவை பிரம்மாவரில் உள்ள மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றனர். நீண்ட நேரம் ரத்தம் வெளியேறியதால் பிரவீன் பூஜாரி சிகிச்சைக்கு பலனில்லாமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும்,படுகாயமடைந்த நிலையில் உள்ள அக்ஷய் தேவடிகாவை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியாகி கர்நாடகா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து உடுப்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.டி.பாலகிருஷ்ணா நேற்று கேஜிகெ கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.விசாரணைக்குப் பிறகு பிரம்மாவர் காவல் துறையினர் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த 18 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.