August 10, 2016 தண்டோரா குழு
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காகப் பத்திரிகையாளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் 3 பத்திரிகையாளர்கள் லேசான காயமடைந்துள்ளனர்.
ரியோ டி ஜெனீரோ நகரில் ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 25,000 பத்திரிகையாளர்கள் ஒலிம்பிக் செய்திகளை சேகரிப்பதற்காக அங்கு முகாமிட்டுள்ளனர்.
இவர்களில் கூடைப்பந்து போட்டிகள் நடந்த இடத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியின் தலைமை பூங்கா அமைந்துள்ள இடத்துக்குப் பத்திரிகையாளர்களின் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் 2 ஜன்னல்கள் பலத்த சப்தத்துடன் உடைந்து நொறுங்கின.இதில் 3 பத்திரிகையாளர்கள் லேசான காயமடைந்து உள்ளனர்.
பத்திரிகையாளர்கள் பயணித்த பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒலிம்பிக் நிர்வாகமோ பேருந்து மீது விஷமிகள் கற்களை வீசியதாகத் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பிரேசில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரியோ ஒலிம்பிக் போட்டியில் நடத்தப்பட்டுள்ள 2-வது தாக்குதல் சம்பவம் இது. கடந்த வாரம் சைக்கிள் போட்டிகளின் போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பிரேசில் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.