January 19, 2018 தண்டோரா குழு
ரூ.75 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம்.இவர் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் புதிதாக வாங்கிய காலி மனைக்கு பொட்டல் வரி நிர்ணயம் செய்வது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகியுள்ளனர்.ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், பல காரணங்களை கூறி இழுத்தடித்துள்ளனர்.
இதற்கிடையில், மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் இடைத்தரகராக செயல்படும் தஞ்சை வடக்கு வீதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் சம்பந்தத்தை அணுகி மாநகராட்சி ஆணையரை சந்தித்து பணம் கொடுத்தால், பிரச்னை தீரும் எனக்கூறியுள்ளார்.
இதனையடுத்து சம்பந்தம், ஆணையர் வரதராஜனை நேரில் சந்தித்தார். அப்போது,அவர் வரி நிர்ணயம் செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். எனினும், 75 ஆயிரம் ரூபாய் தர ஒப்பு கொண்ட சம்பந்தம், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
பின்னர், அவர்களது ஆலோசனையின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரிடம் சம்பந்தம் ரூ.75 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். உடனே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வரதராஜனையும், அங்கிருந்த இடைத்தரகர் நாகராஜனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.