June 6, 2016 தண்டோரா குழு
தற்போது சினிமா மோகம் பிடித்து அலையும் இளைஞர்கள் தங்களது கதாநாயகன் போல இருக்க வேண்டும் என பல்வேறு மாறுதல்களைச் செய்து கொள்கின்றனர். குறிப்பாக நடை, உடை மட்டுமன்றி சிகை அலங்காரமும் அதே போல செய்துகொள்கின்றனர்.
ஆனால் சமீப காலமாக உச்சத்தில் இருக்கும் இளம் நடிகர்கள் தங்களது உடல்வாகை முறுக்கேற்றி சிக்ஸ்பேக் எய்ட்பேக் என கட்டுமஸ்தாக வைத்துள்ளனர். அதைப் போலவே வைத்துக்கொள்ள வேண்டும் என பலர் முயற்சி செய்துவருகின்றனர்.
இந்நிலையில் பொழுதுபோக்குக்காக உடலை வருத்தாமல் தொழில்முறையில் உடல்கட்டை உருவாக்கும் பலரும் அவர்களது ரோல்மாடலாக பார்ப்பது, கொல்கத்தாவைச் சேர்ந்த 103 வயது மனோகர் ஐச் என்பவரைத்தான். ஆனால் இவரைப் பற்றி பலருக்கு தெரியாது.
அவர் யார் என இப்போது பார்ப்போம். கடந்த 1913ம் ஆண்டு பிறந்த இவர் அதிகளவிலான உடற்பயிற்சி கூடங்கள் இல்லாத காலகட்டத்தில் தன்னிடம் இருந்த உபகரணங்களை வைத்தே கட்டுமஸ்தான உடற்கட்டை உருவாக்கினார். பின்னர் அவரது குரு ரஐப் மார்டின் என்பவர் 1942ம்
ஆண்டு ராயல் ஏர் போர்ஷில் சேர்ந்த போது பயிற்சிக்கு சேர்த்துவிட்டார். அதன் பின்னர் அவருக்கு ஏறுமுகம் தான். முழுமூச்சாக பயிற்சி எடுத்த அவர் 1951ம் ஆண்டு நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அதோடு நில்லாமல் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டதன் விளைவாக அடுத்த ஆண்டே உலக ஆணழகன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
பின்னர் பல முறை இரண்டாம் இடமும் மூன்றாம் இடமும் பிடித்ததோடு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களை பெற்று இந்தியாவை உலகளவில் தலைநிமிர வைத்தார். அதன் பிறகுதான் இந்தியாவில் பாடிபில்டிங் கலை அதிகமாக வளரத்துவங்கியது. இவர் தொடர்ந்து தன்னுடைய 90வது வயதுவரை பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டுதான் இருந்தார். இவரது
திறமையை அறிந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். மேலும் இவர் அந்த காலத்தில் நடத்தி வந்த ஜிம்மை கடைசிவரைஅப்படியே வைத்திருந்தார்.
இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இவர் இறுதிவரை புகையிலை மற்றும் மதுவை தொட்டதேஇல்லை எனவும் அதனால் தான் தன்னால் இவ்வளவு நாள் வாழ முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார். இவரை உலக நாடுகளில் உள்ள பாடி பில்டிங் துறை வல்லுனர்களுக்கு பாக்கெட் ஹெர்குலஸ் என குறிப்பிட்டால் தான் தெரியும். ஏனெனில் இவரது உயரம் வெறும் 4 அடி 11 அங்குலம் மட்டுமே.
இறுதியாக தன்னுடைய 103வது வயதில் ஜூன் 5ம் தேதி கொல்கத்தாவில் மரணமடிந்தார். இவரது மறைவிற்கு அரசியல்வாதிகள் மற்றும் பல விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.