November 17, 2016 தண்டோரா குழு
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. 19ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
தமிழகத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் தஞ்சை, அரவக்குறிச்சி இரண்டும், பணப்பட்டுவாடாவால் நிறுத்தப்பட்ட தொகுதிகளாகும். திருப்பரங்குன்றத்தில் அதிமுக உறுப்பினர் மரணமடைந்ததால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. – தி.மு.க. நேரடியாக களம் காண்கின்றன. மேலும், பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்பட சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
ஆனால், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளருக்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்படாததால், அங்கு மட்டும் அந்த கட்சி போட்டியிடவில்லை.
கடந்த 5ம் தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, 3 தொகுதிகளிலும் பிரசாரம் சூடு பறந்தது. 3 தொகுதிகளிலும் அனல் பறந்து வரும் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
தஞ்சையில் திமுக சார்பில் போட்டியிடும் அஞ்சுகம் பூபதியை ஆதரித்து ஸ்டாலின் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இதே போல், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியிலும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க. சார்பில் ஓம்சக்தி சேகர் உள்பட 8 பேர் போட்டியிடுகின்றனர். இங்கும் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, வெளியூரைச் சேர்ந்தவர்கள் வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி புதுச்சேரியில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் சனிக்கிழமை (19ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.