August 12, 2016 தண்டோரா குழு
வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பரைக் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பெற்றோர் லஞ்சம் தர மறுத்ததால், தாமதமாகச் சிகிச்சை அளித்ததில் 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து குழந்தையின் தந்தையும் கூலி தொழிலாளியுமான சிவ்தத் பேசுகையில், கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட எனது மகனைக் கடந்த 7ம் தேதி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். உள் நோயாளியாகச் சேர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், குழந்தைக்குப் படுக்கை ஒதுக்குவதற்காக நர்ஸும், துப்புரவு தொழிலாளியும் லஞ்சம் கேட்டனர்.
லஞ்சம் கொடுக்க மறுத்ததால் என்னுடன் சண்டை போட்டனர். பின்னர் நர்ஸுக்கு 100 ரூபாயும், துப்புரவு தொழிலாளிக்கு 30 ரூபாயும் கொடுத்த பிறகு படுக்கை ஒதுக்கினர். இதனால் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கத் தாமதமானதால் எனது மகன் 9ம் தேதி இறந்து விட்டான் என்று கூறினார்.
மேலும், லஞ்சம் கேட்டு தாமதப்படுத்தியதும் முறையான சிகிச்சை அளிக்காததுமே எனது குழந்தை இறந்ததற்குக் காரணம் என்று வேதனையோடு தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் வேகமாகப் பரவியதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாநில சுகாதார அமைச்சர் எஸ்.பி.யாதவ் உத்தரவிட்டார். மேலும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதனிடையே லஞ்சம் வாங்கிய நர்ஸ் மற்றும் துப்புரவு பணியாளர் ஆகிய இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ஓ.பி.பாண்டே தெரிவித்துள்ளார்.