November 23, 2016 தண்டோரா குழு
இந்தியாவில் மரண தண்டனை நீடிக்க வேண்டுமா, ரத்து செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
உலகில் அனைத்து நாடுகளிலும் மரண தண்டனைக்கு நிரந்தர தடை விதிப்பதற்காக ஐ.நா. பொது அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்திருக்கிறது.
மரணத் தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை என்றாவது ஒருநாள் இந்தியா நிச்சயம் எடுக்கும் என்று எதிர்பார்த்துத் காத்திருந்த மனித நேய ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்நடவடிக்கை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மரண தண்டனை இல்லாத உலகை அமைக்க வேண்டும் என்பதுதான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் லட்சியம். உலகில் உள்ள 195 நாடுகளில் 102 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 39 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை. ஆறு நாடுகளில் சாதாரண குற்றங்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதில்லை. மீதமுள்ள 48 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் என நீளும் அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இன்னும் நீடிப்பது தான் வருத்தமளிக்கிறது.
இதற்கு முடிவு கட்டும் வகையில், 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 6 முறை யாரையும் கட்டுப்படுத்தாத வகையில் மரண தண்டனை ஒழிப்பு தீர்மானங்கள் ஐ.நா. அவையில் கொண்டு வரப்பட்ட போதிலும், அனைத்து தடவையும் அத்தீர்மானத்திற்க எதிராகவே இந்தியா வாக்களித்திருப்பது புரியாத புதிராகவே உள்ளது.
சட்டம் இயற்றுவதில் நாடுகளுக்கு உள்ள உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்றத்தில் வலியுறுத்திய இந்தியா, சட்டம் இயற்றும்போது மக்களின் கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஜனநாயகத்தின் அடிப்படையையும் உணர வேண்டும். எனவே, இந்தியாவில் மரண தண்டனை நீடிக்க வேண்டுமா, ரத்து செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலையை முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.