November 14, 2016 தண்டோரா குழு
ரூ.500, 1000 நோட்டுக்களை அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள், சுங்கச் சாவடிகள் உள்ளிட்ட அரசு அறிவித்த இடங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பழைய ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவும், கள்ள ரூபாய் நோட்டுகள் ஒழிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
அறிவித்தது.
பொதுமக்கள் இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பெரிதும் சிரமப்பட்டனர். குறிப்பாக சிறு,குறு வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலி தொழிலாளிகள் ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகளை மாற்ற சில்லறை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த திட்டத்தைப் பலர் வரவேற்றாலும் கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பெட்ரோல் நிலையம், சுங்கச் சாவடிகள், மருத்துவமனைகளில் மட்டும் நவம்பர் 14 வரை பழைய நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதே போல் வங்கிகளில் இருந்து எடுப்பதற்கான தொகையின் அளவும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ. 500 நோட்டுக்களை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை (நவ. 13) அறிமுகம் செய்தது. இந்த நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏடிஎம் மையங்களில் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் தொகையின் அளவு ரூ. 2000 லிருந்து ரூ. 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் பழைய நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான அளவும் ரூ. 4000 லிருந்து ரூ. 4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெற்ற விவகாரம் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பிரதமர் மோடி, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் உள்ளிட்டோரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.