November 28, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த அக்டோபர் 24ம் தேதி முடிந்துவிட்டது. அதையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும், அது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதையடுத்து, அக்டோபர் 4ம் தேதி இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் திங்களன்று மனு தாக்கல் செய்தது. அதில், உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுவதற்கான நடைமுறைகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை நீதிமன்றம் 2017ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்திவைத்தது.