October 21, 2016 தண்டோரா குழு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக இரு மாநில தலைவர்களும், பிரமுகர்களும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து வருகிறார்கள்.அந்த வகையில் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இந்திய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியை தில்லியில் சந்தித்து மனு அளிக்கப் பயணமாயினர்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது:
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. குடியரசுத் தலைவரைச் சந்தித்தால் நியாயம் கிடைக்கும் என்பதற்காக அவரை மட்டும் சந்திக்க இருக்கிறோம்.பிரதமரைச் சந்திக்கவில்லை.
பிரதமர் மோடி மறைமுகமாக கர்நாடக அரசுக்குச் சாதகமாகவே செயல்படுகிறார். கர்நாடக அரசு சட்ட விரோதமாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு துணை போகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, காவிரி மேலாண்மை அமைக்க மத்திய அரசிடம் அறிவுறுத்தும்படி குடியரசுத் தலைவரை வலியுறுத்துவோம் என்றார் வைகோ.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் தில்லி சென்று பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து மனு அளித்தனர். இந்த சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசினர்.
“காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என்று டி.ராஜா தெரிவித்தார்.
“கர்நாடகம் தண்ணீர் தராத காரணத்தால் விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் தலையிட கோரினோம். எங்களது கோரிக்கையை பரிசீலிப்பதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார்” என்று வைகோ கூறினார்.