November 2, 2016 தண்டோரா குழு
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் ,கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சூழல் உள்ளது.
மேலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.மேலும் ஆந்திராவை ஒட்டியுள்ள கடற்பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.