August 1, 2016 தண்டோரா குழு
சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்றத் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் பெயர் மாற்றம் செய்யும் இந்த சிறப்புத் தீர்மானம் முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும் அதேபோல் மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளை நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்ற கிளை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும், இது குறித்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், கடந்த ஜூலை 19ஆம் தேதி, மக்களவையில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தில், சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்தின் பெயரை மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதிலிருந்து சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்றத் தீர்மானிக்கப்பட்டது. அந்த சட்டத் திருத்தத்திலும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான உயர்நீதிமன்றங்கள் அந்தந்த மாநிலத்தின் பெயராலேயே பெயரிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கும் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயரிடப்படுவதே சிறந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் கொண்டு வந்த இந்தச் சிறப்பு தீர்மானத்திற்குச் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்ததால், இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது.