October 11, 2016 தண்டோரா குழு
காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகத்திற்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் உள்ளது,ஆகையால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு மறுத்து வந்தது.
இந்நிலையில் உச்சநீதிமன்ற கண்டிப்பால் கர்நாடக அரசு தற்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரி விவகாரம் தொடர்பாக மேலாண்மை குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனிடையே கர்நாடக மற்றும் ,தமிழக அணைகளின் நீர் இருப்பு குறித்து அறிக்கை அளிக்க உயர்மட்ட குழு அமைக்கும் படி உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்திரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் குழு அமைத்து தற்போது தமிழகம் மற்றும் கர்நாடக அணைப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்தராமையா,
கர்நாடக அணைகளில் உள்ள நீரின் இருப்பு, நீர்வரத்து மற்றும் மாநிலங்களுக்கான தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு உயர்மட்ட நிபுணர் குழுவை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.அந்த குழு கே.ஆர்.எஸ்.கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய 4 அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து, ஆகியவற்றை ஆய்வு செய்து சென்று உள்ளனர்.
மேலும் குடிநீருக்காக தண்ணீரை கர்நாடகம் எப்படி பயன்படுத்தி வருகிறது என்பதையும் அவர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதே போல் தமிழகத்திலும் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்கிறார்கள். வருகிற 18–ம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அப்போது மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அந்த ஆய்வறிக்கையில் கர்நாடகாவின் நிலைமை குறித்த உண்மை நிலை தெரியவரும் எனவே உச்சநீதிமன்றத்தில் கர்நாடகவிற்க்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.