February 2, 2023 தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் நடுநிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளின் வரலாற்றில் முதன் முறையாக Open Space Foundation அமைப்பின் வழிகாட்டுதலுடன் Rotary E-club of Metro Dynamix பங்களிப்புடன் அரசுப் பள்ளி மாணவர்கள் CHIGURU UFX1 தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.
மாணவர்கள் உருவாக்கிய இந்த தொலைநோக்கி மூலம், சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள், சந்திரனின் பள்ளங்கள், நட்சத்திரத் திரள்கள், மேகங்களின் நகர்வுகள், சூரிய சந்திர கிரகணங்கள் மற்றும் நெபுலா (நட்சத்திரங்கள் உருவாகும் இடம்) ஆகியவற்றை உற்றுநோக்கலாம்.
இந்த பணிமனையானது 31.01.2023 மற்றும் 01.02.2023 ஆகிய இரு நாட்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.முதல் நாள் பணிமனையில் மாணவர்கள் தொலைநோக்கியின் வகைகள், அதன் பாகங்கள், பயன்படுத்தும் முறை ஆகியவற்றை அறிந்துகொண்டனர். ஒவ்வொரு அமர்வுகளிலும் மாணவர்கள் பல அறிவியல் கோட்பாடுகளைக் கேட்டறிந்தும் அதை செய்து பார்த்தும் கற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் Open Space Foundation அமைப்பின் அறிவியலாளர் பரத்குமார், மாணவர்களுக்கு தொலைநோக்கி உருவாக்கம் தொடர்பான கருத்துகளை மாணவர்களுக்கு புரியும்படி எளிமையாக செய்துகாட்டி கற்றுக் கொடுத்தார்.முதல்நாள் இறுதியில் மாணவர்கள், தொலைநோக்கியின் சில பாகங்களை செய்து முடித்தனர்.இரண்டாம் நாளில் தாங்கள் செய்த பாகங்களை சரியாக பொருத்தி தொலைநோக்கிக்கு முழு வடிவம் கொடுத்தனர்.
இதற்கிடையில் துபாயில் உள்ள அல் சதீம் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் உற்றுநோக்கு மையத்தில் பணியாற்றும் விண்வெளி ஆய்வாளர் சுரேந்தர் இணையவழியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும் அங்குள்ள தொலைநோக்கிகள் பற்றியும் அவரது ஆராய்சிகள் பற்றியும் மாணவர்களுக்கு விவரித்தார். இரண்டாம் நாளின் இறுதியில் மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய தொலைநோக்கி மூலம் சந்திரன், விண்மீன் கூட்டங்கள், கோள்கள் அகியவற்றை மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, மாவட்டக் கல்வி அலுவலர் . புனிதா அந்தோனியம்மாள், வட்டாரக் கல்வி அலுவலர் மேரி மார்கிரேட்,ரோட்டரி அமைப்பினர்,பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மற்றும் பொது மக்கள் என அனைவரும் கண்டு ரசித்தனர்.
சர்வதேச விண்கற்கள் முகமை (IASC) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் “சர்வதேச விண்கற்கள் கண்டறியும் திட்டத்தில் நமது மாநிலத்தின் சார்பாக எங்கள் பள்ளியிலிருந்து 10 மாணவர்கள் 2 குழுக்களாக ஆசிரியர் சித்ரா அவர்களின் வழிகாட்டுதலுடன் கலந்து கொண்டனர்.
இதில் 30க்கும் மேற்ப்பட்ட விண்கற்களை மாணவர்கள் கண்டறிந்ததில் 15, விண்கற்களாக இருக்கும் வாய்ப்புள்ளதாக IASC அறிவித்துள்ளது. இதற்கான சன்றிதழ்கள் சர்வதேச விண்கற்கள் முகமையிடமிருந்து (IASC) எங்கள் மாணவர்கள் பெற்றுள்ளனர். இச்சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் மாணவர்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த துடியலூர் பள்ளி ஆசிரியை சித்ரா கூறியதாவது:
விண்வெளி என்பது எப்போதுமே அதிசயத்தக்கது.அந்த அதிசயத்தை மாணவர்கள் கண்டுணர்ந்து கற்று பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த தொலைநோக்கி உருவாக்கும் பணிமனை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மாணவர்களிடையே STEM கல்வியை ஊக்கப்படுத்தவும்,அறிவியல் மனப்பாண்மையை ஏற்படுத்தவும், படைப்பாற்றலை உருவாக்கவும், புதுமைகளைக் காணும் ஆர்வத்தை ஏற்படுத்தவும் உதவுகிறது. மாணவர்கள் தங்கள் கைகளால் அறிவியல் உபகரணங்களை தொட்டுணர்ந்து செய்துபார்த்து கற்கும் போது மிகவும் ஆர்வமாகவும் மனதில் ஆழமாக பதியவும் செய்தது.
மாணவர்கள் தொலைநோக்கியை உருவாக்கும் போது பாடம் தொடர்பான பல அறிவியல் கருத்துகளையும் எளிமையாகக் கற்றுக் கொண்டனர்.இது போல பணிமனைகள் அரசுப் பள்ளிகளில் நடைபெறும் போது மாணவர்கள் அறிவியல் ஆர்வம் தூண்டப்பட்டு விஞ்ஞானிகளாக உருவாக அதிக வாய்ப்புள்ளது என்றார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் . சுந்தரம்மாள் கூறுகையில்,
இந்த தொலைநோக்கி உருவாக்கும் பணிமனையானது மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை அதிகரிக்கச் செய்துள்ளது. மேலும் முயற்சி செய்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் மனதில் வேறூன்றச் செய்துள்ளது. அன்றாட வாழ்வில் நாம் காணும் ஒவ்வொன்றையும் அறிவியல் பார்வையுடன் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் மாணவர்களிடம் மேலோங்கியுள்ளது என்றார்.