October 11, 2016 தண்டோரா குழு
இந்தியாவிற்குள் சீன பட்டாசுகள் கொண்டு வரப்படுவதை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறைக்கு, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
உலக வர்த்தகத்தை பொறுத்த வரையில் இந்தியா மிகப் பெரிய வர்த்தக நாடாக திகழ்கிறது.இந்திய சந்தையை குறி வைத்து பல நாடுகள் தங்கள் விற்பனையை துவங்கியுள்ளனர். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்தியாவில் பட்டாசு விற்பனை சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
சீன பட்டாசுகளில் பயன்படுத்தப்படும், பொட்டாசியம் குளோரேட் ரசாயனப் பொருள், மிகவும் ஆபத்தானது.இந்த ரசாயன பொருளை பயன்படுத்த, இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சீன பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் போலி ஆவணங்கள் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ள சீன தயாரிப்பு பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதுவரை, 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள சீன பட்டாசுகள், கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டு பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சீன பட்டாசுகள், விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும்படி மாநில அரசுகளுக்கு, மத்திய வர்த்தக அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் தூள் போன்ற ஆபத்தில்லாத ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் உலகளவில் சிவகாசி பட்டாசுகளுக்கு வரவேற்பு அதிகம்.தற்போது சீன பட்டாசு வருகையால் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.