July 27, 2016 தண்டோரா குழு
ரயில் பயணம் என்பது மிகப்பெரிய விசயமாக இருந்த பொது அந்தப் பயணச்சீட்டை முன்பதிவு செய்வது என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஒரு டிக்கெட் வாங்க ரயில் நிலையம்தான் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தது.
இதையடுத்து அந்தந்தப் பகுதி எம்.பிகள் குறிப்பிட்ட இரு இடங்களில் உள்ள தபால் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்கப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி ஒவ்வொருவரும் தங்களுடைய பகுதிக்கு வேண்டும் எனக் கோரிக்கை வைத்துப் பெற்றனர். ஆனால் தற்போது உலகம் டிஜிட்டல் மயம் ஆனதால் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தபடியோ அல்லது ஸ்மார்ட் போன் மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்கின்றனர்.
அதுமட்டுமின்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் படி கிராமம் தோறும் பட்டதாரி இளைஞர்கள் இன்டர்நெட் சென்டர் வைத்து அதிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து தருகின்றனர்.
மேலும் தற்போது முன்புபோல் ரயில் டிக்கெட்டைக் காட்டவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
செல் போனில் வரும் குறுந்தகவளைக் காட்டினாலே போதும் என்ற வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது தபால் நிலையங்களில் துவங்கப்பட்ட முன்பதிவு மையங்கள் பலவற்றிற்கு போதிய வரவேற்பு இல்லாமல் போனது. இதன் மூலம் ரயில்வே துறைக்கு, கணினி, இன்டர்நெட் இணைப்பு மற்றும் சில செலவினங்கள் வீணாகின.
இதையடுத்து தற்போது புதிதாகப் பதவியேற்ற அரசு இது போன்ற செலவினங்களைக் குறைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளது. இதையடுத்து நாள் ஒன்றிற்கு 25 முன்பதிவுகளுக்குக் கீழ் இருக்கும் தபால் நிலைய முன்பதிவு மையங்களை மூட முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட மையங்கள் மூடப்பட உள்ளன என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் தபால் நிலையம் – நாமக்கல் மாவட்டம்.
அரவக்குறிச்சி தபால் நிலையம் – கரூர் மாவட்டம்.
இடப்பாடி தபால் நிலையம் – சேலம் மாவட்டம்.
திருச்செங்கோடு தபால் நிலையம் – நாமக்கல் மாவட்டம்.
ராசிபுரம் தபால் பிரிப்பு மையம் – நாமக்கல் மாவட்டம்.
மல்லசமுத்திரம் தபால் நிலையம் – நாமக்கல் மாவட்டம்.
ஊத்தங்கரை தபால் பிரிப்பு நிலையம் – கிருஷ்ணகிரி மாவட்டம்.
இந்த மையங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதி எம்.பிகளால் கேட்டுப் பெறப்பட்டவை. ஆனால் தற்போது அவை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எம்.பிகள் இந்த மூடல் படலத்தை தடுத்து நிறுத்த ஆவன செய்யவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் தற்போது பயனடைந்து வரும் பாமர மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது உறுதி.