December 1, 2017 தண்டோரா குழு
கோவையில் நீதிமன்ற உத்தரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம்,திமுக வழக்கறிஞர் அணியினர் இன்று(டிச 1) மனு அளித்தனர்.
கோவை வ.உ.சி மைதானத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வரும் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இதற்காக கோவை மாநகரம் முழுவதும் கட் அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி நூற்றாண்டு விழாவிற்காக வைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவில் மோதி ரகுபதி என்ற இளைஞர் உயிரிழந்தார். இதனையடுத்து சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.இவ்வழக்கில் விதிமுறை மீறிய கட் அவுட் மற்றும் பேனர்களை அகற்றவும்,பேனர்களை வைக்க அனுமதி பெற்று இருந்தாலும் பொதுமக்களுகு இடையூறு இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்திரவிடப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்திரவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த திமுக வழக்கறிஞர் அணியினர் , நீதிமன்ற உத்திரவுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம் மனு அளித்தனர்.
மேலும்,இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடமும் மனு அளிக்க இருப்பதாகவும் திமுக வழகறிஞர்கள் தெரிவித்தனர்.