December 23, 2017 தண்டோரா குழு
கோவையில் பேருந்துகள் முறையாக இயக்காததை கண்டித்து பேருந்துகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை அடுத்த வெள்ளலூருக்கு உக்கடம்,சிங்காநல்லூர் வழியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து சிங்காநல்லூர் வழியாக இயக்கப்படும் மாநகர பேருந்துகள் சரியான நேரத்திற்கு இயக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் அலட்சிய போக்கை கண்டித்தும் முறையாக பேருந்துகள் இயக்கப்படாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இன்று(டிச 23) காலை வெள்ளலூருக்கு வந்த மாநகர பேருந்தை சிறை பிடித்து போராட்டம் மேற்கொண்டனர்.
மேலும்,அவ்வழியாக வந்த 4 பேருந்துகளை சிறை பிடித்து சரியான நேரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டி போராட்டத்தை தொடர்ந்தனர்.இதனையடுத்து அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,
“காலையில் இருந்து சரியான நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி,கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து பல முறை போக்குவரத்து ஊழியர்களிடம் அறிவிறுத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் இன்று பேருந்துகளை சிறை பிடித்து போராட்டம் மேற்கொள்வதாகவும்,தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அதிகாரிகள்,காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பேருந்துகள் இயக்கப்படும் என உறுதி மொழி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்”.