November 13, 2017 தண்டோரா குழு
சூலூர் கண்ணம்பாளையம் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் வசிக்கும் அருந்ததிய குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் கிராமம்,அப்பநாயக்கன்பட்டி கிராமங்களில் மக்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தாலும், ஒரே வீட்டில் இட நெருக்கடியான சூழ்நிலையில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இருபது ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் இடம் கேட்டு மனு அளித்து வருகின்றனர். இம்மக்களுக்கு கொடுக்கும் அளவுக்கு இடம் இல்லை என அரசு அதிகாரிகள் பொய்யான தகவலை கூறி வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் இன்று அரசு அதிகாரிகளை கண்டித்து ஆட்சித்தலைவர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும், அப்பநாயக்கன்பட்டியிலுள்ள அரசு இடங்களான நத்தம், வேலி, இட்டேரி , குட்டை உள்ளிட்ட இடங்களின் காலி இடங்களின் அளவுகளை குறிப்பிட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் ஆதித்தமிழர் கட்சியின் சார்பாக மனு அளிக்கபட்டது.