January 11, 2018 தண்டோரா குழு
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 4 வது சர்வதேச பலூன் திருவிழா இன்று(ஜன 11) தொடங்கியது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக சுற்றுலா துறையின் சார்பில் 4 வது சர்வதேச பலூன் திருவிழா இன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.இந்த பலூன் திருவிழாவில்
அமெரிக்கா,ஜெர்மனி,நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 பிரமாண்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஆண்டு தோறும் சர்வதேச பலூன் திருவிழாவானது தனியார் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்படுகின்றது.நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்த சர்வதேச பலூன் திருவிழாவில் வெப்ப காற்றின் மூலம் இயக்கப்படும் பிரமாண்ட பலூன்கள் பறக்க விடப்படுகின்றன.
ஒரு பலூனில் பைலட் உள்ளிட்ட 4 பேர் வரை பயணிக்கலாம். இதற்கு 15 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த பலூன் திருவிழாவானது இன்று முதல் வரும் 16 ம் தேதி வரை நடைபெறுகின்றது.
பிரமாண்டமான வெப்ப காற்றால் இயங்கும் பலூன்களை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.இந்த ஆண்டு சுற்றுலா துறையின் சார்பில் தேசிய கொடி வர்ணத்தில் பலூன் ஓன்றும், ரஜினி நடித்த 2.0 படத்தில் வருவதை போன்ற பலூன் ஒன்றும் பறக்கவிடப்பட்டுள்ளது.
காலை,மாலை இருவேளைகளில் இந்த பலூன்கள் பறக்கவிடப்படுகின்றது.இந்த பலூன் திருவிழாவை 50 ஆயிரம் பேர் வரை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்,இந்த பலூன் திருவிழா பார்ப்பதற்கு உற்சாகமாக இருப்பதாக தெரிவிக்கும் பார்வையாளர்கள் இன்னும் இதை சிறப்பாக செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
தென்னிந்திய அளவில் பொள்ளாச்சி பகுதியில் நிலவும் காலநிலை காரணமாக பலூன் திருவிழாவானது இங்கு நடத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.