November 1, 2018
தண்டோரா குழு
கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மதியம் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம்,வாகன பதிவு புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக வரக்கூடிய வாடிக்கையாளர்களிடம் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் அதிகளவிலான லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 9 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி அளவில் அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் வெளிவாயில் கதவை அடைத்தும் வெளியிலிருந்து யாரும் உள்ளே நுழையவும்,உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும் தடை விதித்தனர்.தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத சில ஆயிரங்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல்,கோவை சூலூர் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் ஐந்து பேர்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்து அலுவலர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவரை விசாரணை முடிவடையாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு வெளியிடப்படவில்லை.