December 5, 2017
கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் வராததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் இன்று(டிச 5) ஈடுபட்டனர்.
மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் சட்டப்படி சம்பளம்,போனஸ் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிலாளர் நலத்துறை மூலம் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு மாநகராட்சி அதிகாரிகள் வராததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் 2035 துப்புரவு பணியாளர்கள், மற்றும் 300 டிரைவர் , கிளீனர்களுக்கு சட்டப்படி சம்பளம், போனஸ் மற்றும் பணி நிரந்தரம் ,அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு கடந்த அக்டோபர் மாதம் 19,20 ஆம் தேதிகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனைத்தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் மூன்று வார காலத்திற்குள் சட்டபடி சம்பளம் மற்றும் போனஸை வழங்குவதாக மாநகராட்சி நிர்வாகம் , தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் முன்னால் கையெழுத்து போட்டுக் கொடுத்தும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறையில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து தொடர் போராட்டம் நடத்தப்போவதாக துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக கடிதம் கொடுக்கப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெறுவதால் போராட்டம் நடத்த வேண்டாம் என தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கேட்டுகொண்டதின் பேரில் ஒன்றாம் தேதி நடைபெற இருந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று தொழிலாளர் நலத்துறை அதிகாரி முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை சங்கங்கள் சார்பாக பேச்சு வார்த்தை நடைபெற இருந்தது. இந்த பேச்சு வார்த்தையில் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொள்ளாததால் , துப்புரவு பணியாளர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து வீடு திரும்பாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.