December 28, 2017 தண்டோரா குழு
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கோவை கம்பன் கழகமும் வெங்கடேஷ்வரா கல்வி அறக்கொடை அறநிலையம் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் இணைந்து, சுழலும் சொல்லரங்கம் என்னும் பெயரில் மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பூ.மு.அன்புசிவா வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் எச்.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவை கம்பன் கழகச் செயலர் “கம்பன் கலைச்செம்மல்” நா.நஞ்சுண்டன் தொகுப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசும்போது மாணவர்களை சிறந்த பண்பாடு உள்ளவர்களாக மாற்றவும் அவர்களின் பேச்சாற்றலை வளர்க்கவும் ஆண்டுதோறும் கல்லூரிகளில் கம்பன் விழா நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில், கோவை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் சு.அரவிந்தன் அறிமுகவுரையாற்றினார். பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை கம்பன் கழகச் செயலர் “கம்பன் கலைச்செம்மல்” நா.நஞ்சுண்டன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வங்கினார்.
மேலும் விழாவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை முனைவர் சு.அட்சயா நன்றி உரையாற்றினார்.