December 4, 2017 தண்டோரா குழு
கோவை அருகே குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையில் பகல் பொழுதில் உலா வந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவையை அடுத்த தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இதனால்,அடிக்கடி கிராம பகுதிக்குள் யானைகள் நுழைந்து விடுகின்றன.
இந்நிலையில் நேற்றிரவு(டிச 3) ஒரு ஆண் காட்டு யானை கணுவாய் கிராமத்திற்குள் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இங்கு சுற்றி திரிந்த யானையை, வனத்துறையினர் விரட்ட முயன்றனர். இருப்பினும் யானை வனப்பகுதிக்குள் செல்லாமல், அதே பகுதியில் மீண்டும் மீண்டும் வந்தது.
இதைதொடர்ந்து இன்று காலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை, குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் உலா வந்தது.இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் போராடி யானையை வனத்திற்குள் விரட்டினர்.வனத்தை ஒட்டிய பகுதியில் நுழைந்து வந்த யானை,இப்பொழுது பொதுமக்கள் அதிகமுள்ள ஊருக்குள் நுழைந்தது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.