January 10, 2018 தண்டோரா குழு
திருப்பூரில் தற்காலிக ஓட்டுநரால் இயக்கப்பட்ட அரசு பேருந்து ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது.
திருப்பூரில் தற்காலிக ஓட்டுநரால் இயக்கப்பட்ட அரசு பேருந்து ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானதால் அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . இதனால் திருப்பூரில் சுமார் 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் இருக்க தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு பெருமளவு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து பணிமனையில் உள்ள பராமரிப்பு தொழிலாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் உள்ளதால் பேருந்துகள் பராமரிப்பு பணிகளும் இல்லாமல் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை திருப்பூர் புதிய பேருந்துநிலையத்திலிருந்து கரூர் புறப்பட்ட அரசு பேருந்தினை தற்காலிக ஓட்டுநர் இயக்கியுள்ளார்.பேருந்து குமரன் சாலையை கடந்து யுனிவர்சல் திரையரங்கம் அருகே சென்ற போது அங்கிருந்த ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரவுண்டான தடுப்புகள் சேதமடைந்ததோடு அரசு பேருந்தின் படிக்கட்டுகளும் உடைந்து விழுந்தது.இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப்பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.பராமரிப்பில்லாத பேருந்துகளை இயக்குவதால் நேற்றைய தினம் திருப்பூரில் ஒரு விபத்து ஏற்பட்ட நிலையில் இன்றும் ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.