January 11, 2018 தண்டோரா குழு
கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற பொங்கல் விழாவில் இடம்பெற்ற மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளில் பொங்கல் விழாக்கள் கலை கட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பலகலைக்கழகத்தில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் திண்பண்டங்களுடன் துவங்கிய இவ்விழாவில் நாட்டுப்புற விளையாட்டுகலான சடுகுடு,பம்பரம்,கில்லி போன்றவை மாணவிகளால் விளையாடப்பட்டன.மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான கோலாட்டம்,கும்மியாட்டம்,குலவை பாடுதல் போன்றவற்றில் ஈடுபட்ட மாணவிகள் குதூகலத்துடன் ஆரவாரித்து மகிழ்ந்தனர்.
இதனைத்தொடர்ந்து அடுப்பு மூட்டி புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து கரகாட்டம்,தெம்மாங்கு பாடலுக்கான ஆட்டம் மற்றும் வட கிழக்கு மாநில மாணவிகளில் தமிழக நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.விளையாட்டுகள் முற்றிலும் கணினி மயமாகியுள்ள சூழலில் தமிழர் திருவிழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.